டெல்லி: டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை உறுதி செய்த நிலையில், அவரிடம் மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் உடனான உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில் அண்மையில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் அவருடன் டெல்லி சென்றனர்.
நேற்று இரவு டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அமித்ஷாவுடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இருந்து உள்ளனர். இந்த புகைப்படங்களை அண்ணாமலை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த சந்திப்பு 50 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில் குறிபாக பாஜக நிர்வாகிகளின் கட்சி தாவல் மற்றும் அண்ணாமலையின் அதிமுகவுக்கு எதிரான பேச்சுக்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்டு இருக்கும் மோதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டு உள்ளது.
இதில் குறிப்பாக வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளின் தலைவர்களும் பேசி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் கூடுதலான இடங்களை பாஜக கேட்டு உள்ளது
பாஜக வலுவாக இருக்கும் இருக்கும் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அமித்ஷாவும் ஜேபி நட்டாவும் அதிமுக தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே முடித்துக்கொண்டால் அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை விரைந்து தொடங்க முடியும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், கூட்டணியில் உள்ள வலுவான கட்சிகள் எவை என்பது குறித்தும் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு உள்ளனர்.
அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் அதிமுக தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்கள். அதிமுக – பாஜக கூட்டணியில் மேற்கொண்டு விரிசல் நிலவி வந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடக்கூடாது என்றும், அப்படி செய்தால் தலைவர் பதவியில் இருந்து விலகி தொண்டராகவே இருப்பேன் என்று பேசி இருந்த நிலையில் அவரை வைத்தே கூட்டணி பேச்சை அமித்ஷா – எடப்பாடி பழனிசாமியிடம் பேசி முடித்து உள்ளார்.
எதிர்காலத்தில் அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பங்களை ஏற்படுத்தும் எந்த விசயங்களும் இல்லாமல் சுமூகமாக செயல்படும் என்று அமித்ஷா உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் இறுதியில் இரு எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் சேலத்து மாம்பழங்களை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.
பொதுவாக திருமணம் தொடங்கி ஏதாவது ஒரு ஒப்பந்தம் செய்தால் இரு தரப்பினரும் பழங்களை பகிர்ந்துகொள்வது தமிழ் கலாச்சாரம். அந்த வகையிலேயே எடப்பாடி பழனிசாமி மாம்பழம் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவின் சின்னம் மாம்பழம் என்பதை அதையும் இதில் சிலர் தொடர்புபடுத்தி வருகிறார்கள்.