கோவை போத்தனூரை சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 36) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 22 வயது பெண்ணிடம் பேசி வந்துள்ளார். மேலும் காளிமுத்து அந்த பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து விட்டது. இருந்த போதிலும் காளிமுத்து அந்த பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் உன்னைத்தான் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்ளாமல் நீ வேறு ஒருவரை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? என்று கேட்டுள்ளார். நான் உங்களை காதலிக்கவில்லை என்றும் ,எனக்கு திருமணம் முடிந்து விட்டதால் என்னிடம் இனிமேல் பேச வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் காளிமுத்து அடிக்கடி செல்போனுக்கு தொடர்பு கொண்டு தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூறி அழுதார். உடனடியாக அவர்கள் காளிமுத்து வீட்டிற்கு சென்று இது தொடர்பாக பேசி உள்ளனர் .இதில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து அந்தப் பெண்ணின் பெற்றோரை தாக்கினாராம். இது தொடர்பாக அந்த இளம்பெண் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் விசாரணை நடத்தி காளிமுத்துவை கைது செய்தனர். இவர் மீது தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர் – வாலிபர் கைது..!
