கோவை பள்ளபாளையம் சிந்தாமணி புதூரை சேர்ந்தவர் இளமாறன். இவர் பழைய டெக்ஸ்டைல் எந்திரம் மற்றும் உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வெள்ளலூர் சாலையில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த குடோனில் போதிய வசதி இல்லாததால் அந்த பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான குடோனில் எந்திரங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த குடோன் திறக்கப்படாமல் பூட்டியே காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த இளமாறன் அந்த குடோனை திறந்து காண்பிக்கும்படி உரிமையாளரிடம் வலியுறுத்தினார். இதை அடுத்து குடோன் உரிமையாளர் குடோனை திறந்தார். அப்பொழுது குடோன் உள்ளே சென்று பார்த்த இளமாறன் அதிர்ச்சி அடைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்பட்டு இருந்தது. இதை அடுத்து அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.