தேனி:மதுரை – தேனி அகல பாதையில் 12 ஆண்டுகளுக்கு பின் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கவுள்ளார்.மதுரை – போடி இடையே 98 கி.மீ., துாரமுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி 2011 ஜனவரியில் துவங்கியது. இத்திட்ட பணிகளுக்கு மத்தியில் முன் ஆட்சியிலிருந்து காங்., அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தேனி மாவட்ட வியாபாரிகள் போராட்ட குழு அமைத்து போராடினர்.பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு 2016ல் மதுரை – போடி அகல ரயில் பாதைக்கு ரூ.450 கோடி அனுமதிக்கப்பட்டது. 2021ல் மதுரை – தேனி வரை அனைத்து பணிகளும் முடிந்து ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. விரைவில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பின் மதுரை தேனி இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கப்படும். ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.