தமிழ்நாடு மற்றும் கேரளா ஏடிஎம் மையங்களில் உதவுவதாக கூறி பணம் திருடிய நபர் 44 ஏடிஎம் கார்டு மற்றும் 5290 ரூபாயுடன் வால்பாறையில் கைது – காவல் துறையினருக்கு பாராட்டு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்.பி.ஐ.ஏடி.எம். மையத்தில் வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டை சேர்ந்த முருகம்மாள் வயது 45 என்பவர் பணம் எடுக்கச் சென்ற போது அங்கு பணம் எடுத்துத் தருவதாகக் கூறிய நபர் ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு அவரின் ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு அவர் சென்றவுடன் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 9 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றதாக கடந்த 7 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிற்கிணங்க துணை கண்காணிப்பாளர் ஸ்ரீ நிதி ஆலோசனையின் படி வால்பாறை நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 20 தேதியான இன்று நடுமலை ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடி எம் மையத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்க் கொண்டதில் மேற்கண்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அந்த நபரிடமிருந்து 44 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரொக்கமாக 5290 ரூபாய் மற்றும் இரண்டு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த குன்னு முக்கா என்பவரின் மகன் நஜீப் வயது 36 என்பதும் ஏற்கனவே இவர் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள ஏடி எம் மையங்களில் இதேபோன்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. எனவே இதுபோன்ற அறிமுகம் இல்லாத நபர்களிடம் பொதுமக்கள் யாரும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளையோ அல்லது ரகசிய எண்களையோ தெரிவிக்க வேண்டாம் என்று துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நிதி தெரிவித்துள்ளார். மேலும் துரித நடவடிக்கையால் குற்றவாளியை கைது செய்து பணம் மற்றும் ஏடிஎம் கார்டை மீட்ட காவல் துறையினருக்கு பாதிக்கப்பட்ட முருகம்மாள் தனது நன்றியை தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்..