இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை: ரூ3 கோடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வரவேற்பின் பின்னணியில் இருக்கும் தேர்தல் கணக்கை விவரிக்கிறது இச்செய்திக் கட்டுரை.

தியாகி இம்மானுவேல் சேகரன்.. தென் தமிழ்நாட்டின் கணிசமான வாக்கு வங்கி கொண்ட தேவேந்திரகுல வேளாளர் ஜாதி போற்றி புகழ்பாடும் பெருந்தலைவர். 66 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாதிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர் இமானுவேல் சேகரன். அப்போது தென் தமிழ்நாட்டில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது இமானுவேல் சேகரன் படுகொலை.

ஒருவகையில் தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டவும் இமானுவேல் சேகரனாரின் தியாகம் உதவிக் கொண்டிருந்தது. ஆனால் அரசியல் ரீதியாக அணி திரண்ட தேவேந்திர குல வேளாளர்கள், தலித் பட்டியலில் இருந்து நீக்கம்; இடஒதுக்கீடு எதிர்ப்பு என தமிழ் மண்ணின் பாரம்பரிய அரசியலில் இருந்து வேறுபடுத்திக் கொள்ள தொடங்கினர். அதனால் இயல்பாகவே பாஜக பக்கம் தேவேந்திர குல வேளாளர்கள் சாய்ந்து நிற்கின்றனர்.

தென் தமிழ்நாட்டின் ஒரு பெரும் சமூகம், பாஜகவுடன் தங்களை ஐக்கியப்படுத்தி நிற்பது ஆளும் திமுக, ஆண்ட அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மிகப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் என யூகங்கள் இருப்பதன் பின்னணியில் அங்கே தேவேந்திரகுல வேளாளர்களின் கணிசமான வாக்குகளும் ஒரு காரணம் என்பது வெளிப்படையானது.

இத்தனைக்கும் தேவேந்திர குல வேளாளர்களின் சில அரசியல் தலைமைகள், திராவிட கட்சிகளில் இருந்து முளைத்தவை. ஆனால் காலம் ஏதோ ஒரு காரணங்கள் பாஜக பக்கம் அவர்களை தள்ளிவிட்டது. இந்த நிலையில் தேவேந்திர குல வேளாளர்களை தங்கள் பக்கம் இழுக்கிற திமுகவின் முயற்சிகளில் அடுத்த படிக்கல்லாக, இமானுவேல் சேகரன் நினைவிடம் ரூ3 கோடியில் கட்டப்படும் என்ற அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் தலித் இளைஞராக நடித்திருந்தார். ஓரளவுக்கு தலித் மக்களிடத்தில் திமுகவுக்கு இருந்த ‘இடைவெளியை’ அரசியல் ரீதியாவும் மாமன்னன் சரி செய்ய முயற்சித்திருக்கிறது என்பது மிகை அல்ல.

இதனைத் தொடர்ந்துதான் இன்று ரூ3 கோடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு மண்டப அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனார், 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.

இந்த மணிமண்டப அறிவிப்பானது, தேர்தல் காலத்தில் தேவேந்திர குல வேளாளருக்கு திமுக அரசு செய்தது என்ன என்பதை பேசுவதற்கான, தேவேந்திர குல வேளாளருக்கும் திமுகவுக்கும் இடையேயான விலகலை சரி செய்யக் கூடிய இன்னொரு காரணியாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..