ஸ்டாலின், ரஜினி, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களின் ப்ளூ டிக் அதிரடி நீக்கம் – ஓ! இதுதான் காரணமா..?

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலோன் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே எழுத முடியும் என்ற அளவை, அதிகப்படுத்தியிருக்கும் அவர் ப்ளூ டிக் என்ற சப்ஸ்கிரிப்சனை சந்தாவாக மாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு ப்ளூ டிக் என்ற அம்சம் டிவிட்டரில் இலவசமாக கொடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பதை அங்கீகரிக்கும் வகையில் ப்ளூ டிக் இருந்தது. பிரதமர், முதலமைச்சர், அரசு அலுவலர்கள், சினிமா பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால், எலோன் மஸ்க் இதனை சந்தாவாக மாற்றிய அவர், ப்ளூடிக் வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவித்தார். ஏற்கனவே ப்ளூ டிக் வாங்கியவர்கள் தங்களுக்கான ப்ளூ டிக் வேண்டும் என்றால் ஏப்ரல் 20க்குள் கட்டணம் செலுத்தி சந்தாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவித்திருந்தார். ஆனால், அந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் இருக்கும் பல பிரபலங்களின் ப்ளூ டிக் இரவோடு இரவாக டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சிம்பு, கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, குஷ்பூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த பிரபலங்கள் சிலர் குழப்பமடைந்தனர். சந்தா கட்டினால் மட்டுமே ப்ளூ டிக் என்ற விவரம் தெரிந்த பிறகு ப்ளூ டிக்கிற்கு பை பாய் தெரிவித்துள்ளனர். குஷ்பூ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து எலோன் மஸ்கிற்கு கேள்வி எழுப்ப, பிரகாஷ் ராஜ் பாய் பாய் ப்ளூ டிக் என சென்டாப் கொடுத்துள்ளார்.