மீண்டும் தொடங்கியது மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை… மகிழ்ச்சியில் சுற்றுலா பணிகள்.!!

நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை 6 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், குகைகளை ரசிப்பதற்காக மலை ரயில் பயணத்தையே சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவர். இருப்பினும் மழைகாலங்களில் மலைகளிலுருந்து மண்சரிவது, மரங்கள் விழுவது என தண்டாவளங்கள் சேதமடைகின்றன. இதனால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் நீலகிரியில் பெய்த கனமழையால் ஹில்கிரோ – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவுற்றதால், இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது.