தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு ஸ்டேடியம் கட்டவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதை உடனே சாத்தியப்படுத்தவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
விளையாட்டுத்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டதாகவும் இதில் 61 தொகுதிகளில் ஏற்கனவே ஸ்டேடியம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் எஞ்சியுள்ள 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்குகளும் நிறுவப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் தொகுதியான கொளத்தூர், அமைச்சரின் தொகுதியான சேப்பாக்கம் தவிர வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி மற்றும் காரைக்குடி ஆகிய 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் ரூ.3 கோடி செலவில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் சரியான விளையாட்டு மைதானங்கள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் மாணவர்கள் விளையாடுவதற்கு ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அத்தகைய நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டேடியம் கட்டும் பணிகளில் முழு மூச்சுடன் இறங்கியதாக தி.மு.க இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதரை சந்தித்தார். சந்திப்பின்போது, தமிழகத்தில் விளையாட்டுக்களை மேம்படுத்துவது குறித்த விஷயங்களை பிரதமர் கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு மினி ஸ்டேடியம் கட்டவது தொடர்பாக அமைச்சர், பிரதரிடம் விளக்கியதாகவும் அதை ஆர்வமுடன் கேட்டுக்கொண்ட பிரதமர் அமைச்சரை பாராட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
பிரதமருடனான சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர்களிடம் உற்சாகமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பது
தொடர்பாக தெரிவித்தேன். அதை ஆர்வமுடன் கேட்டுக்கொண்ட பிரதமர், அவற்றையெல்லாம் யார் பராமரிப்பது? அரசே பராமரிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். அதன்பின், அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் என்னிடம் பகிர்ந்து கொண்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.