தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உழவர் பெருமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1972-ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொன்விழா ஆண்டினைக் கொண்டாடி, பொதுவிநியோகம் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்களைக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகித்து, இந்தியாவிற்கே முன்னோடியாக பொதுவிநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. வெளிச்சந்தை விலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட அமுதம் பல்பொருள் அங்காடிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்பட்டு துணை முதலமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தரம்/சரியான விலை/ உங்களின் தேர்வு என்ற வகையில் பொதுமக்களின் ஆதரவுடன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் 22.10.2024 அன்று தீபாவளியை முன்னிட்டு ரூ.499/- விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, பொது மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. மேலும், எதிர்வரும் கிறிஸ்துமஸ்/ஆங்கிலப் புத்தாண்டினைக் கவனத்தில் கொண்டு இல்லங்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட. அதிகபட்ச விற்பனை விலை ரூ.1392/- உள்ள 20 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.999/- என்ற விலையில் கிறிஸ்துமஸ்/புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பாக விற்க முடிவு செய்யப்பட்டு இன்று (18.12.2024) அதன் விற்பனையை சென்னை அண்ணாநகர் அமுதம் மக்கள் அங்காடியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் துவக்கி வைத்தார்கள். மஞ்சள்தூள், சர்க்கரை, பாஸ்மதி அரிசி, ரவை, மைதா, ஆட்டா, சூரியகாந்தி எண்ணெய், அமுதம் ஸ்பெசல் (பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, மராட்டி மொக்கு, கல்பாசி) வெல்லம், நெய், சேமியா, முறுக்கு மாவு, அதிரசமாவு, பிரியாணி மசாலா, கரம் மசாலா, சாம்பார் பொடி, இட்லி பொடி, பெருங்காயத்தூள், சிக்கன் 65 மசாலா, மீன் மசாலா ஆகிய பொருட்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
இந்த சிறப்பு மளிகைத் தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர், கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடிகளில் செயல்படுத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ்/ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் தொடக்க விழா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, பெருநகர சென்னை மாநகராட்சி 102-வது வார்டு மாமன்ற உறுப்பினர் இராணி இரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் த.மோகன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.