கிருஷ்ணகிரி: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய நலன் கருத்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என்று அதிமுக முடிவு செய்துள்ளதாக அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல் அதிமுக, பாஜக தனித்தனியாக போட்டியிடுமா என்று இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் கேபி முனுசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அதிமுக – பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததே தொடக்கப் புள்ளியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசியது, கூடுதலாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அண்ணாமலை ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி அதிமுகவின் அனைத்து தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கடுமையான பதிலடி கொடுத்தனர். இருப்பினும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்வதாகவே தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேபி முனுசாமி கூறுகையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கும். எங்களை பொறுத்தவரை பிரதமராக உள்ள நரேந்திர மோடி இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்வதற்கு பணியாற்றி வருகிறார்.
இந்த சூழலில் பாஜக தனித்துப் போட்டியிடுமா, அதிமுக தனித்துப் போட்டியிடுமா என்று கேள்வி யாரும் எங்களுக்குள் இடைவெளி ஏற்படுத்த வேண்டும். எங்களுக்கு தேசிய நலனே முக்கியம். அந்த தேசிய நலனில் யார் பிரதமராக வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். மீண்டும் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கிடையே இதுபோன்ற சிறுசிறு சம்பவங்கள் நடப்பது சாதாரணம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. பல்வேறு சிந்தனைகளை கொண்டவர்கள் ஒரே கட்சியில் இருப்பார்கள்.
அப்படி இருப்பவர்கள் ஏற்க முடியாத சில கருத்துக்களை சொல்வார்கள். அப்போது அனுபவம் வாய்ந்தவர்கள், ஒதுங்கி சென்றால் தான் நினைக்கும் இடத்தை அடைய முடியும். இல்லையென்றால் நாம் இருக்கும் இடத்தில் தான் இருக்க முடியும். அதிமுகவை ஒரே இடத்தில் இருக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் எங்களின் இலக்கை அடைய வேகமாக முன்னேறி செல்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் இருப்பதாக ஜேபி நட்டா கூறியது பற்றிய கேள்விக்கு, அது உண்மை தான். திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாரிசை உருவாக்கவில்லை. ஆனால் கருணாநிதி, முக ஸ்டாலின் ஆகியோர் தங்களது வாரிசை உருவாகியுள்ளார்கள். மு.க.ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்கி உள்ளார். எங்களை அடிமை அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டு, திமுகவின் மற்ற தலைவர்களை அடிமைகளாக வைத்துள்ளார்கள். பல அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்று விமர்சித்தார்.