கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக நாகராஜ், எழுத்தராக விஜயகுமார். பதிவேற்றராக சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் செலுத்திய தொகை 20 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நடந்த தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. உறுப்பினர்கள் செலுத்திய தொகைக்கு போலியான ரசீது தயார் செய்து பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சுந்தரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்குப்பதியப்பட்டது. 2001ல் வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணை நடந்த காலத்தில் சங்க செயலாளர் நாகராஜ் இறந்துவிட்டார். பதிவு எழுத்தர் சந்திரசேகர் ஏற்கனவே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார். மற்றொருவரான எழுத்தர் விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஜே எம் 4 மேஜிஸ்ட்ரேட் சரவணபாபு குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.