அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுகவுக்கு வந்து தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கக்கூடிய சூழலில், இந்த வழக்கில் புகார் கொடுத்தவர்கள் சிலர் சமரசமாக சென்று விடுகிறோம் வழக்கை முடித்து வையுங்கள் என்று கூறியதன் அடிப்படையில் வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்..
இதற்கு எதிராக தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை என்பது உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிரடியான தீர்ப்பு வெளியாகியுள்ளது.. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.. அதாவது செந்தில் பாலாஜி தொடர்புடைய இந்த பணமோசடி வழக்கில் சமரசத்தை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மற்றும் அந்த வழக்கு தொடர்பான அனைவருக்கும் புதிய சிக்கல் மீண்டும் எழுந்துள்ளது. அதேபோல வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கான ஒரு அனுமதியையும் இதன்மூலம் அவர்கள் பெற்றுவிட்டார்கள். சமரசம் என்றால் கூட குற்றவியல் நடவடிக்கை (criminal proceeding) என்று வரும்போது அதனை நிறைவு செய்ய வேண்டியது அவசியம் என்ற முக்கியமான கருத்துக்களையும் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் முன் வைத்திருக்கிறார்கள்.
இதனால் செந்தில் பாலாஜிக்கு ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய இந்த வழக்கு புகார் அளித்து மீண்டும் விசாரணை நடைபெற உள்ள சூழலில் அது செந்தில் பாலாஜி தரப்பிற்கு சிக்கலான விஷயமாக மாறி உள்ளது.