சூடான் நாட்டில் இன்னும் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி அளித்துள்ளார்.
சூடானில் தற்போது ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டில் உள்ள பிற நாட்டு மக்களை அந்த, அந்த அரசு உதவியுடன் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாகத் தமிழக மக்களை விமானம் மூலம் சூடானில் இருந்து டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, டெல்லியிலிருந்து விமான மூலம் சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் 08 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை விமானம் மூலம் டெல்லியிலிருந்து 09 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், சூடான் நாட்டிலிருந்து இதுவரை 95 நபர்களை நம் அரசாங்கம் சார்பாக பாதுகாப்பான முறையில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சூடான் நாட்டிலிருந்து மேலும் இன்று அதிகாலை விமானம் மூலம் 09 பேர் சென்னை வந்தடைந்தனர். தற்போது இந்த 09 பேர்களை விசாரணை செய்ததில் இன்னும் சூடான் நாட்டில் 200 தமிழர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், இன்னும் சூடான் நாட்டில் இருக்கும் தமிழர்களை நமது நாட்டிற்குப் பாதுகாப்பான முறையில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போர் செய்தியை அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களை நமது நாட்டிற்குப் பாதுகாப்பான முறையில் கொண்டுவர வேண்டும் என நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
நமது தமிழ் சங்கம் சார்பாகவும், தூதரகம் சார்பாகவும் தமிழக மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு,அரசு சார்பாக முழு போக்குவரத்து செலவும் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், மத்திய அரசு சார்பாக, ஆப்பரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த இந்தியர்களையும் பாதுகாப்பான முறையில் அழைத்து வருகின்றனர். தற்போது சூடான் நாட்டிலிருந்து தாய் நாட்டிற்குத் திரும்பிய தமிழர்கள், மீண்டும் அந்த நாட்டில் பணியைத் தொடர்வதா, இல்லையா என்பது சில நாட்களுக்கும் பிறகு தான் தெரியும். மீண்டும் அந்த நாட்டில் பணியைத் தொடர வேண்டும் என்றால் பொதுமக்களான அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் கூறினார்..