கடன் தொல்லையால் 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாயும் தற்கொலை..

திருச்சி மனச்சநல்லூரை சேர்ந்த சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளவர் கடன் தொல்லையால் தனது மகன் மகள் ஆகியோரை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு சேலையால் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் இறந்தால் தனது குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அந்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மணச்சநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). இவர் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா (32). இவர் நர்சிங் படித்திருந்தார். மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாகவும் இருந்துள்ளார். இவர்களுக்கு கோகுல்நாத் (14), சாய் நந்தினி (11) ஆகிய மகனும் மகளும் இருந்தனர். இவர்களில் கோகுல் 9ஆம் வகுப்பும், சாய் நந்தினி 6ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த ஆண்டு கிருஷ்ணமூர்த்தி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரால் வேலைக்கு சரியாக செ முடியவில்லை என தெரிகிறது. இந்த கொடுமையில் மேலும் கொடுமையாக கீர்த்திகாவிற்கு கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் மகன் கோகுல்நாத்திற்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கீர்த்திகா மருத்துவ செலவுக்காக தனக்கு தெரிந்தவர்களிடமும் மகளிர் சுய உதவிக் குழுவிலும் கடனை பெற்றுள்ளார். கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது மகனின் நோய், கடன் தொல்லை, கணவரின் கஷ்டம் உள்ளிட்டவைகளை எண்ணி கீர்த்திகா அழுதுள்ளார். இந்த மன வேதனையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அப்போது கடைசியாக அவர் தனது குழந்தைகளின் முகத்தை பார்க்க சென்றார்.
தான் இறந்துவிட்டால் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகிவிடுவரே என எண்ணிய கீர்த்திகா, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கோகுல்நாத்தையும் சாய் நந்தினியையும் தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வேலை முடிந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, கதவு திறந்து கிடந்ததை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து கிருஷ்ணமூர்த்தி கதறி அழுதுள்ளார். இவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
இதனிடையே மணச்சநல்லூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரின் உடல்களையும் கைப்பற்ற பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு குறித்து போலீஸார், கிருஷ்ணமூர்த்தி, அக்கம் பக்கத்தினர், கீர்த்திகாவுக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மூன்று பேர் தூக்கிட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.