கோவை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரா பகுதியை சேர்ந்த சஜீவ் கருண் (வயது 35 )இவர் “ஜென் டூ ஜென் “என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்று அறிவித்தார். மேலும் சிலரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தால் ரூ. 2 லட்சமாக இரட்டிப்பு செய்து தரப்படும் என்று தெரிவித்தார். இதனை நம்பி ஏராளமானோர் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளாவை சேர்ந்த 300 பேர் வரை இவரிடம் முதலீடு செய்தனர். இவர்களிடம் முதலீடாக பெற்ற பணம் ரூ. 110 கோடியை அவர் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர் . இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். இந்த நிலையில் மோசடி பணத்தில் சஜிவ் கருண் கேரளாவில் பல்வேறு குறும்படங்கள் தயாரித்துள்ளார். இதில் சில குறும்படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் பல இடங்களில் நிலம் மற்றும ஒட்டல்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: சஜீவ் கருண் பண இரட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி 300 பேரிடம் ரூ. 110 கோடி வரை பணமோசடி செய்துள்ளார். இவரது மனைவி சினிமா இயக்குனராக உள்ளார். அவரை வைத்து ஒரு படம் தயாரித்துள்ளார் .அந்த படத்தை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டு இருந்தார் .மேலும் ஏராளமான குறும்படங்களை தயாரித்துள்ளார். மேலும் சில குறும்படங்களில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார். மோசடி படத்தில் கேரளாவில் பல்வேறு இடங்களில் எஸ்டேட் சொகுசு பங்களாக்கள் வாங்கியுள்ளார். பொள்ளாச்சியில் 3 ஏக்கர் நிலத்துடன் பண்ணை வீடும் வாங்கி உள்ளார். மோசடி பணத்தில் மாடல் அழகிகளுடன் உல்லாசமாக வாழ்ந்ததாகவும் தெரிகிறது. கேரளாவில் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 85 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.