கோவையில் வடமாநில தொழிலாளி கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாரதி நகரில தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்றும் இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இறந்து கிடந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், டி..எஸ்.பி. நமச்சிவாயம் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது. அப்போது சஞ்சய் சவுத்ரியை அவரது மனைவியின் கள்ளக்காதலன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சஞ்சய் சவுத்ரியன் மனைவி கடந்த சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ஷானி ( வயது 24) என்ற கட்டிட தொழிலாளியுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். சஞ்சய் சவுத்ரி அவ்வப்போது சென்று தன் மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார் . இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் ஷானி தனது நண்பர் தேவா என்ற குபேந்திரன் (வயது 29 )என்ற கட்டிட தொழிலாளியுடன் சேர்ந்து சஞ்சய் சவுத்ரியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் திட்டி அவரை மதுபான கடைக்கு அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்துள்ளனர்.பின்னர் சஞ்சய் சவுத்ரிக்கும் முகேஷ்ஷானிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சஞ்சய் சவுத்திரியை கடுமையாக தாக்கி, லூங்கியால் சஞ்சய் சவுத்திரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் .இதற்கு தேவா உதவி செய்துள்ளார். இதை தொடர்ந்து முகேஷ் ஷானி தேவா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.