பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்த கோரி முதலமைச்சருக்கு முத்தரசன் வேண்டுகோள்.!!

பத்திரிகையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு அரசு அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுயுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் ஆகியவற்றில் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது!

பத்திரிகையாளர்கள் விண்ணப்ப படிவம், அடையாள அட்டை பெறுதல் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கான விண்ணப்ப படிவம் இரண்டையும் அரசு வெளியிட்டுள்ளது. இவை இரண்டுமே பத்திரிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சிறு பத்திரிக்கைகளை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் உள்ளதாக கருத்து நிலவுகிறது. பத்திரிகைத் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் அனைவருமே பத்திரிகையாளர்கள்தான். ஆனால் செய்தியாளர்களை மட்டும் தனியாகப் பிரித்து, அதிலும் வடிகட்டி எண்ணிக்கையைச் சுருக்கி, விரல் விட்டு எண்ணக்கூடிய செய்தியாளர்கள் மட்டுமே பத்திரிகையாளர்கள் என்று அரசு வரையறுப்பது எந்த வகையில் நியாயம்

பத்திரிகையாளர்கள் போராடிப் பெற்ற சில சலுகைகளை பத்திரிக்கையாளர்கள் பெறுவதற்கு அரசு அடையாள அட்டை பெறுவதை முன் நிபந்தனையாக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? 2023 ஆம் ஆண்டிற்கான பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான வழி முறைகள் கடுமையாக் கப்பட்டுள்ளன.

இது பத்திரிகையாளர்களை வடிகட்டும் விதமாக அதிலும் குறிப்பாக சிறு, குறு பத்திரிக்கையாளர்களை பாதிப்பதாக அமைந்துள்ளது. பத்திரிகையாளர்களின் பணி நியமன ஆணை. பத்திரிக்கையாளர்களின் கல்விச் சான்றிதழ். வங்கி மூலம் ஊதியம் பெறுவதற்கான சான்று. மூன்று ஆண்டுகளுக்கான ஆடிட்டர் மூலம் வரவு செலவு கணக்கு. கால முறை இதழ்கள் 10000 பிரதிகள். அச்சடித்ததற்கான அச்சக பில்கள்.

இது போன்ற விதிமுறைகள் நடைமுறையில் நிறைவேற்றப்படுவது மிகவும் கடினமான ஒன்று. இது அரசுக்கு தெரியாத ஒன்றல்ல. நன்றாகவே தெரியும், சிறு பத்திரிகைகளை பொறுத்த அளவில் பெரும்பாலும் வணிக நோக்கில் செயல்படுவது இல்லை. நியூஸ் பிரிண்ட் பேப்பர், அச்சுக் கூலி, விநியோகச் செலவு, நிர்வாகச் செலவு என்று கணக்கிட்டால் பத்தாயிரம் பிரதிகள் அச்சடித்தாலும் சிறு பத்திரிக்கைகளுக்கு நஷ்டமே ஏற்படும். பத்திரிக்கை நடத்தவே முடியாது.

காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என்று மீடியாக்கள் விரிவுப்பட்ட நிலையில் சிறு பத்திரிக்கைகள் எவ்வாறு தாக்குப் பிடிக்க முடியும்? நஷ்டத்தோடு இயங்கும் சிறு பத்திரிக்கைகள் 10,000 பிரதிகள் எப்படி அச்சடிக்க முடியும்? மிக மிக குறைவான செலவில் நஷ்டத்தோடு நடத்தப்படும் சிறு பத்திரிக்கைகளுக்கு ஆடிட்டர் மூலம் கணக்கு தர முடியுமா?

அதுவும் மூன்றாண்டு கணக்கை இப்போதே கேட்பது எந்த வகையில் நியாயம்? ஒரு சிலவற்றை தவிர்த்து பல்வேறு சிறுபத்திரிக்கைகள் சமூகப் பொறுப்புணர்வுடன், மக்கள் நலனை முன்வைத்து, ஜன நாயகத்தின் நான்காவது தூண்களாக செயல்படுகின்றன. நஷ்டத்தை ஈடுகட்ட எல்லா வகையிலும் செலவுகளை குறைக்கும் கட்டாயம் சிறு பத்திரிக்கைகளுக்கு ஏற்படுகிறது.

இதில் ஊதியமும் ஒன்று. எனவே சிறு பத்திரிக்கைகளில் ஊதியம் பிரதானமானதாக இருக்காது சமூகப் பொறுப்புணர்வு என்ற நோக்கம் பிரதானமாக இருக்கும். ஊதியம் வாங்காமலும் குறைந்த ஊதியத்திலும் அதுவும் தொடர்ந்து பெற முடியாமலும் அர்ப்பணிப்பு முறையில் செயல்படும் சிறு குறு பத்திரிகையாளர்கள் அதிகம்.

இவர்களை சம்பளம் என்ற வரையறைக்குள் அதுவும் வங்கி மூலம் பெற வேண்டும் என்று கொண்டு வருவது நடைமுறைக்கு எப்படிப் பொருந்தும் கல்வித் தகுதி என்பதை விட பத்திரிக்கையாளர்களுக்கு சமுதாய ஞானம் மற்றும் அனுபவங்களே போதுமானது பொருத்தமானது.

சிறு பத்திரிக்கையாளர்களின் இந்த யதார்த்த உண்மை நிலையை அரசு புரிந்து சிறு பத்திரிக்கையாளர்களை தூக்கி உதவிட அரசு முன்வர வேண்டும். அந்த வகையில் சிறு மற்றும் குறு பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.

நடப்பு ஆண்டிலிருந்து அமலுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. அடுத்த ஆண்டிலிருந்து அமலுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து பத்திரிகைகளும் ஆர்.என்.ஐ பதிவு பெற்றிருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆர்.என்.ஐ பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும். பணியாற்றும் பத்திரிக்கை நிறுவனங்களிடமிருந்து பணியாற்றுவதற்கான சான்றும், அனுபவச் சான்றிதழும் தரப்பட வேண்டும்.

பத்திரிகைகள் நிற்காமல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்க வேண்டும்.தலைமைச் செயலகம் லோக்கல் காவல் நிலையம், உள்ளாட்சி. அலுவலகங்கள், கிளை, நூலகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும். 3000 பிரதிகளுக்கு குறையாமல் அச்சடித்தது விநியோகிக்க வேண்டும். இவற்றை அரசு சீராக கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு அடையாள அட்டை வழங்குவதில் Accreditation Card – Press Pass என்ற பேதம் தேவையில்லை. ஒரே அடையாள அட்டையாக வழங்க வேண்டும். இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய முறையில் மாற்றம் கொண்டு வரும் என்று நம்புகிறோம். சமூகப் பொறுப்புணர்வு என்ற நோக்கத்தோடு செயல்படும் உண்மையான சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் நல வாரியத்தை பொருத்தவரையில் நலவாரியத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக அமைய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.