கோவை: பெண் சாவில் சந்தேகம் இருப்பதால் ஈசா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் இன்று கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுபஶ்ரீ 11ந் தேதி ஈஷா மையத்திற்கு வந்து உள்ளார். அதன் பின்னர் 18ந் தேதி முதல் என்ன ஆனார் என தெரியாத நிலையில் 1ந் தேதி அவர் விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை உடற்கூறு ஆய்வு செய்ய மாட்டார்கள். ஆனால் அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் இறந்த பின்னர் அவரது கணவர் பழனிகுமாருடன் சத்குரு பேசி உள்ளார். எனவே போலீசார் உரிய விசாரணை நடத்தி மென்மையான போக்கை கடை பிடிக்காமல் ஈஷா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் விலை உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.