அட்சய திருதியை அன்று 250 பவுன் கொள்ளையடித்த மர்ம நபர்… மதுரை பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் கைவரிசை..!!

துரை: மதுரையில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டை உடைத்து 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்ஷய திருதியை நாளில் பணத்தை அள்ளிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்

அட்சய திருதியை நாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அவை பல மடங்கு அதிகரிக்கும் என்பது ஐதீகம். அக்ஷயம் என்றால் தேயாத குறையாத என்று பொருள்படும் நாள் என்பதால் அந்த நாளில் தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அக்ஷய திருதியை நாளை ஒட்டி நேற்று அதிகாலை 5 மணி முதல் பொதுமக்கள் நகை கடைகளில் நகைகள் வாங்க ஆர்வம் காட்டினர். இரவு 10:30 மணி வரையிலும் பல்வேறு கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 14,000 கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் விற்பனையானது. சிலர் ஒரு வாரத்திற்கு முன்பே 75% தொகையினை செலுத்தி முன்பதிவு செய்து இருந்தனர். அது மட்டுமல்லாமல் தங்க நாணயங்களையும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர் கடந்த ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் விற்பனையானது. இந்நிலையில் இந்த ஆண்டு 14,000 கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் விற்கப்பட்டது.

இது கடந்த ஆண்டை விட சுமார் 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கும் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

 இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் மதுரையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு விளாம்பட்டி காவல் நிலையத்திற்கு ஷர்மிளா பணிக்குச் சென்றார்  காலை வீட்டை திறந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் வீட்டில் பரவி கிடந்தன. அப்போதுதான் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

 இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

கொள்ளை கும்பல் குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.