3வது முறையாக பிரதமராகிறார் நரேந்திர மோடி..!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் குஜராத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் நாடு முழுவதும் ஜூன் 4 ம் தேதியான நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது

இதில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு இடங்களிலும் 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.இந்நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 240 தொகுதிகளில் தான் வென்றுள்ளது. எனவே தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால், பீகாரின் நிதிஷ்குமார், மற்றும் தெலுங்குதேசம் கட்சியின் ஆதரவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி மலரவுள்ளது. 3வது முறையாக மோடி பிரதமராகிறார் என்று தெரிய வந்துள்ளது. மேலும் ஜூன் 9ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.