கோவையில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கைது..!

டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.

கடந்த 6 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 17) ரூ. ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்ட பா.ஜ., தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடுகளின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனை, ஆர்ப்பாட்டம் செல்லும் வழியிலே போலீசார் கைது செய்தனர்.