நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்..!

ம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது கடந்த மே மாதம் 5ந் தேதி நடைபெற்றது.அதன்பிறகு ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் வெளியான நிலையில் தான் நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் வெடித்தன.

அதாவது நீட் தேர்வுக்கு முன்பாகவே பீகாரில் வினாத்தாள் கசிந்தது, மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என தொடர்ந்து முறைகேடு புகார்கள் வர தொடங்கின. இதனால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்யவில்லை.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணையிலும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது. வினாத்தாள் கசிந்ததை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டது. அதேவேளையில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டுமே வினாத்தாள் கசிந்தது. பிற இடங்களில் வினாத்தாள் கசியவில்லை. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது நீட் முறைகேடுகள் நாடு முழுவதும் நடைபெற்றது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கும் போதுமான தரவுகளும் இல்லை.

நீட் தேர்வையே ரத்து செய்து மறுதேர்வு நடத்தினால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீட் முறைகேடுகள் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பது உறுதியானால் பின்னர் நடவடிக்கை எடுக்கலாம். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என தெரிவித்தது. மேலும் மாநிலங்கள், தேர்வு மையங்கள் வாரியாக ரிசல்ட் வெளியிட உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிடாதது ஏன்? என்பது பற்றி வரும் நாளில் விரிவாக தெரிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி இளநிலை நீட் தேர்வு 2024 ரத்து செய்ய மறுத்தது ஏன்? என்பது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் விரிவான விளக்கத்துடன் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரியாக் ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதனால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரி கிடையாது.தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு அமைத்து சரி செய்ய வேண்டும்.நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடுதல் கவனம் தேவை,வினாத்தாள் கசிவைத் தடுக்க சைபர் செக்யூரிட்டி பயன்படுத்த வேண்டும்.

எனவே தேர்வு முறையில் உள்ள முறைகேடுகளை நிபுணர் குழு அமைத்து சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.