நேபாள விமான விபத்து… ஓடுபாதையில் சறுக்கி தீப்பிடித்து 18 பேர் பலியான சோகம்..

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையிலேயே விபத்துக்குள்ளானது.

காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 19 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு இன்று காலை 11 மணியளவில் சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. பொக்ராவுக்குச் செல்லும் இந்த விமானத்தில் பணியாளர்கள், டெக்னீஷியன்கள் உட்பட 19 பேர் இருந்தனர். பராமரிப்பு சோதனைகளுக்காக இந்த விமானம் பொக்காரா சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்புவதறக்காக ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிச் சென்று திடீரென நொறுங்கியது. விமானம் விழுந்த உடனேயே தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீயை அணைத்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து காலை 11 மணியளவில் நிகழ்ந்ததாக நேபாள செய்தி இணையதளமான காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்த நிலையில், விமானம் முற்றிலுமாக தீயில் கருகி உள்ளதால், 19 பேரின் நிலை என்ன ஆனது என பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானி மணிஷ் ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விமான விபத்துகள் நேபாளத்தில் அடிக்கடி நடந்து வருகின்றன. நேபாள நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு விமான விபத்து நடந்தேறுகிறது. கடந்த 2010 முதல், நேபாளம் 12 ஆபத்தான விமான விபத்துக்களைக் கண்டுள்ளது.

ஜனவரி 2023 இல், மத்திய நகரமான பொக்காரா அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட விமானத்தில் இருந்த 72 பேரும் உயிரிழந்தனர். விமானம் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்தது.

கடந்த மே 29, 2022 அன்று, தாரா ஏர் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 22 பேர் உயிரிழந்தனர்.

2018 ஆம் ஆண்டில், காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் ஒரு விபத்தில் சிக்கியது. விமானம் தரையிறங்கியபோது திடீரென விழுந்து தீப்பிடித்ததில் 51 பேர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.