5 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள்.. அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சென்னை : கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பிஸியாக இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 5 மாவட்டங்களுக்கு புதிதாக பார்வையாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம், செங்கல்பட்டு தெற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்துள்ளார் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளராக கே.முரளிதரன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பார்வையாளராக எம்.ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பார்வையாளராக கே.வெங்கடேசன், சேலம் மேற்கு பார்வையாளராக ஆர்.ரகே.வரதராஜன், தருமபுரி மாவட்ட பார்வையாளராக கே.முனியராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும் – வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடியை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிக்காக டெல்லி சென்றார் அண்ணாமலை. அங்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்.

கர்நாடக மாநில பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா தேர்தல் பணிகள் காரணமாகவே பிரதமர் மோடி வருகையின்போதும் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு வரவில்லை.