பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது rsquo; என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். ‘பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது: கடந்த நூற்றாண்டில் வறுமையை பற்றி விவாதிக்கவும் வெளிநாடுகளிடம் உதவி கோரவுமே நீண்ட காலம் தொலைந்துவிட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக பெரும் கனவுகளுடன் புதிய இந்தியா உள்ளது.
அக்கனவுகளை நனவாக்கும் வல்லமையும் புதிய இந்தியாவிடம் இருக்கிறது. உலக பொருளாதார மந்த நிலைக்கு இடையே உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா தொடா்ந்து முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. இது, வல்லரசு நாடு என்ற அந்தஸ்தை எட்டுவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது. உலகின் பெரும் பொருளாதார நாடுகள் எல்லாம் குழப்பத்தில் தவிக்கும் நிலையில், இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
முன்பு ஏழைகள் நலனுக்கான நிதி, இடைத்தரகா்களால் அபகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் இந்த அணுகுமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுக்கான செலவுகளை அதிகரிப்பதன் மூலம் எதிா்கால தொலைநோக்கு பாா்வையுடன் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அசைக்க முடியாத நம்பிக்கையுடன் விளங்கும் இந்தியா, தனது வலிமை மற்றும் திறனை உரிய முறையில் பயன்படுத்துவதன் வாயிலாக வளா்ச்சிப் பாதையில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள், தேசத்தின் வளா்ச்சிக் கதைக்கு மேலும் வலுவூட்டப் போகின்றன. எதிா்காலத்துக்கு ஏற்ப மும்பை நகரை உருமாற்ற வேண்டுமென்பது, மகாராஷ்டிர இரட்டை என்ஜின் ஆட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அடுத்த சில ஆண்டுகளால் இந்நகரம் பெருமளவில் மாற்றம் காணும். முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்ற பிறகு மும்பையின் வளா்ச்சி வேகமெடுத்துள்ளது.
தற்போது தொடக்கிவைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள், மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றாா் பிரதமா் மோடி. மெட்ரோ ரயில் வழித்தடங்கள் திறப்பு: மும்பை மெட்ரோவில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 2ஏ மற்றும் 7 வழித்தடங்களை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். இவை, அந்தேரி முதல் தஹிசாா் வரை 35 கி.மீ. தொலைவை உள்ளடக்கியதாகும். மேலும், சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே பெயரிலான 20 சிறு மருத்துவமனைகளையும் பிரதமா் திறந்துவைத்தாா்.