புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும், விரைவில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3 கிமீ ராஜபாதையை சீரமைத்தல், புதிய நாடாளுமன்றம், புதிய பிரதமர் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றன. இதில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020ல் அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமடைந்த நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. நாடாளுமன்ற கட்டிட உட்புறத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடப்பதாகவும் இம்மாத இறுதிக்குள் கட்டிடம் தயாராகி விடும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தேதி குறித்து ஒன்றிய அரசு விரைவில் முடிவு செய்து அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் பட்ஜெட் கூட்டம் தொடர் நடக்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட் தொடரின் 2ம்கட்ட கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.