கோவை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்து அமைப்பினர் சார்பில் ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர்.
அதன்படி கோவையில் விநாயகர் சிலையை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் இல்லாமல் வைக்கக்கூடாது. அதே போல் சிலையை வைக்கும் இடங்களில் மின்வாரியம், தீயணைப்புத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும். வழிபாடு செய்பவர்கள் முறையாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதியில்லாமல் சிலைகளை வைத்து வழிபாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டின் போது மட்டும் 2 மணி நேரம் ஒலி பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வழிபாடு செய்யப்படும் இடத்திற்கு அருகில் அரசியல் மற்றும் மதத்தலைவர்களின் படங்கள் வைக்கவும் அனுமதியில்லை. அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். பட்டாசு வெடிக் அனுமதிக்கக்கூடாது.
விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.