திரும்ப திரும்ப துரத்தும் நிபா வைரஸ்… கோழிக்கோட்டில் காரணத்தை கண்டறியும் கேரள அரசு.!!

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் திரும்ப திரும்ப நிபா வைரஸ் கண்டறியப்படுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுடன் முதல் நபராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கேரள அரசு நிபா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட மருத்துவர் பரிசோதனையில், அவரது 9 வயது மகனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சிலருக்கு நிபா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மருத்துவமனையில் நிபாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்தவர்கள் குணமடைந்ததை தொடர்ந்து, கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார். சிகிச்சை இருந்தவர்களுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவர்கள் முற்றிலும் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளதாகவும், ‘ஒன் ஹெல்த்’ என்ற திட்டத்தின் கீழ், கேரள மாநிலத்தில் சுகாதாரத்துறை நடவடிக்கைகளை அனைத்து துறைகளுடன் ஒன்றிணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் திரும்ப திரும்ப நிபா வைரஸ் தாக்குதல் ஏற்படுவது ஏன் என்பதை கண்டறியும் வகையில், கள ஆய்வு நடத்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..