இந்தியா வல்லரசாக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூடுகிறது..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக வளர்த்து எடுக்கும் வகையில் பொருளாதார வியூகங்களை வகுப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் உயரிய கொள்கை வியூகங்களை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு நிதி ஆயோக். இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவிற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைவராக உள்ளார். அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இதன் நிர்வாகக் குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 8 வது நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. வளா்ந்த பாரதம் 2047: இந்தியா்களின் பங்களிப்பு என்பதை மையக் கருவாக கொண்டு நடைபெறும் இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

2047 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக வளர்த்து எடுக்கும் வகையில் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தற்போது உலக அளவில் 5 வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பல்வேறு துறைகளில் பிரபலமான நாடாகவும் இந்தியா சா்வதேச அளவில் திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவின் வளா்ச்சியை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வேகப்படுத்துவது குறித்தும், இதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக நிதி ஆயோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல், நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பது குறித்து, உள்கட்டமைப்பு, முதலீட்டை அதிகரித்தல், சமூக மேம்பாடு, நாட்டின் சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம், திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும் நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது.