9-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமில்லை – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து 9-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது. நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாவது இருமாத நாணயக் கொள்கையை அறிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்ற நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

# இதன்மூலம் ஸ்டாண்டிங் டெபாசிட் வசதி (எஸ்டிஎஃப்) விகிதம் 6.25 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் வசதி (எம்எஸ்எஃப்) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவீதமாகவும் உள்ளது.

# உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றன. உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

# தென்மேற்கு பருவமழையின் நிலையான முன்னேற்றம், காரீஃப் பருவத்துக்கான விதைப்பு மற்றும் நீர்த்தேக்கங்களின் அளவை மேம்படுத்துதல் ஆகியவை காரீஃப் பருவ விளைச்சலுக்கு மிகவும் நல்லது.

# ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.8 சதவீதமாக நிலையாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

# 2024-25 ஆம் ஆண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆகவும், முதல் காலாண்டில் 7.1% ஆகவும், இராண்டாவது காலாண்டில் 7.2% ஆகவும், மூன்றாவது 7.3% ஆகவும், நான்காவது காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும். 2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி. 7.2% என்று கணிக்கப்பட்டுள்ளது.”

# உணவுப் பணவீக்கம் அதிகரிப்பதை எம்பிசி தொடர்ந்து கண்காணிக்கும்.

#  உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம் சீரற்ற விரிவாக்கமாக இருந்தாலும், நிலையானதாக உள்ளது.

# மேம்படுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகள் கிராமப்புற நுகர்வுக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்குகிறது.

# அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையின் பின்னணியில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன, சேவைகள் துறையானது உற்சாகமாக உள்ளது.

# ஏஐ போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உலகப் பொருளாதாரத்திற்கு புதிய சவால்களை முன்வைக்கின்றன என்றார்.