மும்பை: இனிமேல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே கிடையாது என்று பிசிசிஐ அதிரடி அறிவித்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம், அடாரி மற்றும் வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து உள்ளது. இந்நிலையில், இனிமேல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே கிடையாது என்று பிசிசிஐ அதிரடி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘காஷ்மீர் தாக்குதலை கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம். ஆனால் ஐசிசி போட்டிகள் வரும்போது ஐசிசி வலியுறுத்தல் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம். ஐசிசிக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியும்’ என்றார்.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், ‘பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளதால் கிரிக்கெட் சமூகம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளது. பிசிசிஐ சார்பில், இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை வலிமையான வார்த்தைகளால் கண்டிக்கிறோம். அதே வேளையில், பிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
எல்லையில் தீவிரவாதகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருந்ததாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததாலும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்த்தது. கடைசி 2008ல் தான் இந்திய அணி பாகிஸ்தான் சென்றது. 2012-13ல் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் இருதரப்பு தொடரில் பங்கேற்றது. அதன் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர் நடக்கவில்லை. கடந்த 2023ம் ஆண்டு ஐசிசி நடத்திய உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதன்பின், சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா செல்லவில்லை. இந்தியா பங்கேற்ற போட்டிகள் மட்டுமே துபாயில் நடந்தது குறிப்பிடத்தக்கது.