கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பெங்களூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் அறிவிப்புகளும் களைகட்டி வருகிறது. பாஜக – காங்கிரஸ் இடையே கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கர்நாடகாவின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில் அவ்வாறாக அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் மீது ஆசாமி ஒருவர் செல்போனை வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை மற்றும் மறுநாள் பெங்களூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி ஊர்வலமாக செல்லும்போது அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் யாரும் மாடியில் நிற்கக் கூடாது, குடியிருப்பு நுழைவாயில்களின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும், அந்த சமயம் யாரும் வெளியே செல்ல அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் ஊர்வலத்தின்போது போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.