கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பச்சாபாளையத்தில் ஒரு காலி இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருந்தது .இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தினார்கள். மேலும் உடல் கிடந்த இடம் அருகே வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலன் ராவத் ( வயது 33) என்பதும், அவர் கருமத்தம்பட்டி அருகே உள்ள தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் தங்கியிருந்தும் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மர்ம ஆசாமிகள் கை, கால்களை கட்டி கடத்தி வந்து இந்த பகுதிக்கு கொண்டு வந்திருப்பதும் , பின்னர் அவரை அடித்து கொலை செய்துவிட்டு உடலை வீசி விட்டு சென்றதும், உடல் அடையாளம் தெரியாமல் இருக்க கல்லால் முகத்தை சிதைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது .இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.