இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள்..!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முடிவு கட்ட மேஜர் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். பாட்டிலின் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், சில கடைகளில் கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாகவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில மதுப்பிரியர்கள் ஆதங்கத்துடன் பதிவிடுவதை காண முடிகிறது.

தொடர்ந்து எழுந்து வரும் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை என டாஸ்மாக் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளது. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்த அனைத்துக்கடைகளிலும் ஸ்வைப்பிங் மெஷின்கள் நிறுவ வங்கிகளுக்கு அழைப்பு விடுத்து ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த புள்ளியில் பங்கேற்கும் வங்கிகளை தேர்வு செய்து பிறகு அனைத்து கடைகளிலும் ஸ்வைபிங் மெஷின்கள் அமைக்கப்படும் எனத் தெரிகிறது..