இனி யூடியூப் ஷார்ட்ஸ் 3 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்..!

வாஷிங்டன்: சமூக வலைத்தளங்கள் பார்வையாளர்களைத் தக்கவைக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

இதற்கிடையே பொதுமக்களிடையே பிரபலமாக உள்ள யூடியூப் ஷார்ட்ஸில் மிக முக்கிய மாற்றம் வரவுள்ளது. அதாவது ஷார்ட்ஸின் அதிகபட்ச நீளம் 60 நொடியில் இருந்து 180 நொடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. குறிப்பாக யூடியூப் இல்லாமல் ஒரு நாளை கழிப்பதே இளைஞர்களுக்குக் கடினமாகிவிட்டது.

யூடியூப் தளத்தில் ஷார்ட்ஸ் எனப்படும் குறுகிய வீடியோவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பலரும் இந்த ஷார்ட்ஸ் வீடியோ மூலமாகவே சப்ஸ்கிரைபர்களை சேர்த்துள்ளனர். சுமார் 60 நொடிகள் மட்டுமே இருப்பதால் பலரும் இந்த வீடியோக்களை ஆர்வமாகப் பார்க்கிறார்கள். இதற்கிடையே இந்த ஷார்ட்ஸ் வீடியோவில் தான் இப்போது மிக முக்கிய மாற்றம் வரவுள்ளது.

அதாவது வரும் அக். 15ம் தேதி முதல் யூடியூப் ஷார்ட்ஸ் நீளம் 3 நிமிடங்களாக அதிகரிக்க உள்ளது. முன்பு 60 நொடிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அது இப்போது 3 நிமிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஷார்ட்ஸில் வீடியோ போடும் பலரும் 60 நொடிகள் போதவில்லை என்பதால் அதை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அக். 15ம் தேதி வரை நீங்கள் 30 நொடிகளுக்கு மேலான வீடியோவை பதிவிட்டால் அது வழக்கமான லாங் வீடியோவாகவே கருதப்படும். அது ஷார்ட்ஸாக கருதப்படாது. அக். 15க்கு மேல் அப்லோட் செய்யும் வீடியோக்கள் 180 நொடிகள் வரை இருந்தால் அவை ஷார்ட்ஸ் வீடியோவாகவே கருதப்படும். monetizationம் அதற்கேற்ப இருக்கும் என தெரிகிறது.

யூடியூப் தளத்தில் ஷார்ட்ஸ் வீடியோவுக்கு காப்பி ரைட் பொருந்தாது. அதேநேரம் லாங் வீடியோ காப்பி ரைட் சிக்கலில் மாட்டினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்போது ஷார்ட்ஸ் வீடியோ நீளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விதியையும் யூடியூப் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது அக். 15க்கு மேல் ஷார்ட்ஸ் வீடியோ 60 நொடிக்குக் கீழ் இருந்தால் காப்பி ரைட் பிரச்சினை வராது. அதேநேரம் 60 நொடிக்கு மேல் உள்ள வீடியோ காப்பி ரைட்டில் மாட்டினால், அந்த வீடியோ நீக்கப்படும். அதேநேரம் சேனல் மீது எந்தவொரு நடவடிக்கையும் தற்போதைய சூழலில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கவே இன்ஸ்டாகிராம் தளத்தில் இப்போது 3 நிமிடங்கள் வரை வீடியோ போட முடிகிறது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதுதான் கிங் ஆக உள்ளது. டிக்டாக் தளம் கடந்த 2021ல் மூன்று நிமிட வீடியோக்களை அறிமுகப்படுத்திய நிலையில், இப்போது 10 நிமிடங்கள் வரையிலான வீடியோவை டிக்டாக்கில் அப்லோட் செய்ய முடிகிறது.

அமெரிக்காவில் யூடியூப்பிற்கு போட்டியாக டிக்டாக் வளர்ந்து வருகிறது. டிக்டாக் 10 நிமிட வீடியோவை அனுமதிப்பது யூடியூப்பை காலி செய்யும் முயற்சியாகவே கருதப்பட்டது. இப்போது அதற்குப் பதிலடியாக யூடியூப் தனது ஷார்ட்ஸ் வீடியோவின் ரூல்ஸை மாற்றி அமைத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் பார்வையாளர்களைப் பெற எந்தளவுக்குப் போட்டிப் போடுகிறார்கள் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.