திருவொற்றியூர்: சென்னை துறைமுகத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 37 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கன்டெய்னர்களில் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர்களில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து சட்ட விரோதமாக பொருட்களை கொண்டு செல்வது, சட்ட விரோத பொருட்களை கடத்துவது போன்றவற்றை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்னர்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள கப்பல் ஒன்றில் இருந்து வெளிநாட்டு மதுபாட்டில்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் வெளியில் கடத்தப்பட்டு, கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்ய உள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை துறைமுகம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தினர். அதில், சென்னை துறைமுகத்திலிருந்து வெளியே வந்த ஒரு கன்டெய்னர் லாரியை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தபோது ரூ.1 லட்சம் மதிப்புள்ள 37 வெளிநாட்டு மதுபாட்டில்கள் 2 பைகளில் இருப்பது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்து, டிரைவர் பரந்தாமனை கைது செய்து, சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுபோன்ற கடத்தல் பொருட்களை தடுக்க சென்னை துறைமுக பகுதி முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடத்தல்கள் சம்பவங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.