அடக்கடவுளே!! வளர்ப்பு நாய்களை சிறுத்தைக்கு உணவாக வனப்பகுதியில் கட்டிச்சென்ற கொடூர உரிமையாளர்..!

நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை வந்து செல்வதாக கூறி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நாய் குறைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து குடியிருப்பு வாசிகள் ஒரு சிலர் அங்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது சங்கிலியால் 2 நாய்கள் கட்டப்பட்டு கிடந்தது. இதைத் தொடர்ந்து விலங்குகள் நல பாதுகாப்பு செயல்பாட்டாளர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், 2 வளர்ப்பு நாய்களை மீட்டு, பிக்கட்டியில் இயங்கி வரும் சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நாய்கள் ஒரு வாரத்திற்கு மேலாக உணவு, தண்ணீரின்றி மிகவும் நலிவுற்ற நிலையில் மெலிந்து போய் இருந்தது. தற்போது அந்த நாய்களுக்கு அங்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஊட்டியை சேர்ந்த பொறி வியாபாரம் செய்து வந்த உதயகுமார் என்பவர் 2 கிரேட் டேன் ரக நாய்களை வளர்த்து வந்ததும், இதன் பின்னர் அந்த நாய்களை வனப்பகுதியில் கட்டி சென்றதும் தெரிய வந்தது.
தற்போது உதயகுமாரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் கோவையில் சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்துடன் அவர் கோவையில் இருக்கிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் உடைய உதயகுமார், இந்த 2 நாய்கள் குட்டி ஈனும் வயதைக் கடந்திருக்கிறது. இவற்றால் இதற்கு பின்னர் எந்த பலனும் இல்லை என்பதால் சிறுத்தை அல்லது ஏதாவது விலங்கினத்திற்கு உணவாகட்டும் என்று வனப்பகுதியில் விட்டு சென்றுள்ளார். தற்போது அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வளர்ப்பு பிராணிகள் நல பாதுகாப்பு செயற்பாட்டாளர் நைஜில் கூறுகையில், ஆதிகாலம் முதல் தொன்றுதொட்டு நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மீது மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு பிறகு வெளியிடங்களுக்கு செல்ல முடியாதால் வளர்ப்பு பிராணிகள் மீது ஆர்வம் அதிகரித்தது. நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை நன்றாக பராமரிக்க வேண்டும் இல்லாவிட்டால் அதற்குரிய மையங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுபோல் காடுகளில் விட்டு செல்லக்கூடாது என்றார்.