திருச்சி மேம்பாலத்தில் விரிசல் அமைச்சர்கள் ஆய்வு…

திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் மாவட்ட ஆட்சியர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி.காா்னா் அருகேயுள்ள ரயில்வே மேம்பால பக்கவாட்டுச் சுவரில் மழைநீா் அதிகம் தேங்கியிருந்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தை தாங்கி நிற்கும் தூணுடன் பக்கவாட்டுச் சுவா் சிமென்ட் கற்கள் அனைத்தும் சாய்ந்துள்ளன. இதனால், பாலம் சற்று இறங்கியுள்ளது. பாலத்தில் வியாழக்கிழமை இரவு முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அருகில் உள்ள அணுகு சாலை வழியாக இருபுறமும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், என்ஐடி குழுவினா் பழுதடைந்த பாலத்தை சீரமைப்பது தொடா்பாகவும், பழுது காரணம் குறித்த ஆய்வறிக்கையை மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கியுள்ளனா். இதன் தொடா்ச்சியாக ஐஐடி குழுவினா் சனிக்கிழமை மாலை பாலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். முன்னதாக, தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தனித்தனியாக பாலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து புனரமைப்பு பணிகள் குறித்து ஆட்சியா் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகரக் காவல் ஆணையா் என். காமினி, மண்டலத் தலைவா் மு. மதிவாணன் ஆகியோா் உடனிருந்தனா். போக்குவரத்து மாற்றம் காரணமாக ஜி.காா்னா் பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல கூடுதல் நேரம் தேவைப்பட்டது. வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியிருப்பதால் அவ்வப்போது நெரிசலும் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் கூறியது: தண்ணீா் அதிகம் தேங்கியிருந்ததால் ஜி காா்னா் பாலம் சரிவை சந்திக்க நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், பாலத்தின் சேதம் தொடா்பாக என்ஐடி குழுவினா் தங்களது ஆய்வு அறிக்கையை அளித்துள்ளனா். இதேபோல, ஐஐடி குழுவினரும் சனிக்கிழமை பாலத்தை பாா்வையிட்டு ஆய்வு அறிக்கையை வழங்கவுள்ளன. இந்த ஆய்வு அறிக்கைகளின்படி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் பாலத்தைப் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளனா். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பிரதான பகுதி என்பதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளது. எனவே, இரவு, பகல் பாராது 24 மணிநேரமும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. சனிக்கிழமை இரவு முதல் பணிகளைத் தொடங்கியுள்ளோம். 30 நாள்களுக்குள் பழுது நீக்கும் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் சரிந்துள்ள சிமென்ட் கற்களை அகற்றி அந்தப் பகுதியை பலப்படுத்துவது, தூண்களின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பது, சரிவான இடத்தில் மீண்டும் பழைய நிலைக்கு பாலத்தை கட்டமைப்பது என திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தில் அவசர நிதியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும் வரையில் 30 நாள்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்றாா் ஆட்சியா். ஒரு மாதத்துக்கு இதுவே மாற்றுப் பாதை! பாலம் பழுது நீக்கத்துக்காக இனி 30 நாள்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டிய மாற்றுப் பாதை வழிகள்: மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூா், பெரம்பலூா் வழியாக செல்ல வேண்டும். சென்னை, பெரம்பலூா் மாா்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து துறையூா், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும். சென்னை, பெரம்பலூா், அரியலூா் மாா்க்கத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பால்பண்ணை, துவாக்குடி, திருச்சி புதிய சுற்றுச்சாலை வழியாக சென்று வரவேண்டும். சேலம், நாமக்கல் மாா்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும். கோவை, கரூா் மாா்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும். அரியலூா் மாா்க்கத்திலிருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள் நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக சென்று வரவேண்டும். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலிருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் மணிகண்டம், வண்ணாங்கோயில், மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூா் பெரம்பலூா் வழியாக செல்லவேண்டும். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூா் செல்லும் பயணிகள் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட், ஏா்போா்ட், திருச்சி புதிய சுற்றுச்சாலை, துவாக்குடி வழியாக செல்லவேண்டும். தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரும் பயணிகள் பேருந்துகள் வழக்கமாக வரும் பாதையான துவாக்குடி, திருவெறும்பூா், பால்பண்ணை வழியாக வரவேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.