காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்கிறார்..!

ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்கிறார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டும் கூட காங்கிரஸ் அதனைப் புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இன்றைய பதவியேற்பு விழாவில் உமர் அப்துல்லாவுடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உமர் அப்துல்லா பதவியேற்கும் விழாவில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி., பங்கேற்க உள்ளார்.

காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 4 பேர், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந் தனையற்ற ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரிகிறது. வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஹரியானா தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தற்போது ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.