சுகாதாரப் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்பின் அவசியத்தையும், உலகளாவிய சுகாதார சமத்துவத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் கொரோனா தொற்று நமக்கு புரிய வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார மாநாட்டின் 76 வது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 75 ஆண்டுகளாக உலகிற்கு சேவையாற்றும் வரலாற்று மைல்கல்லை நிறைவு செய்ததற்காக உலக சுகாதார அமைப்பை வாழ்த்துகிறேன் என்றும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்குகளை நிர்ணயிக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், நெருக்கடி காலத்தில் இந்தியா தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 300 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அனுப்பியதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். நடப்பாண்டில் இந்தியா, ஜி 20 தலைவர் பதவியில், ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடன் பணியாற்றி வருகிறது என்றார்.
நல்ல ஆரோக்கியத்திற்கான இந்தியாவின் நோக்கம் ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என தெரிவித்த பிரதமர், நமது முழு சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருக்கும்போது மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என கூறினார். மேலும் நமது பார்வை மனிதர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும், அது விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உட்பட முழு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் விரிவடைகிறது” என்றும் பிரதமர் கூறினார்.