கோவை: நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து வாலாங்குளம் வரை சென்று திரும்பும் வகையில், 8 கி.மீ., துாரம் கொண்ட நடைபாதையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற, 4ம் தேதி சென்னையில் இருந்து துவக்கி வைக்கிறார்.ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் துவங்கி திருச்சி ரோடு – ஜி.எச்., சிக்னல் – வாலாங்குளம் முழு சுற்று – ஜி.எச்., சிக்னல் – திருச்சி ரோடு – வெஸ்ட் கிளப் ரோடு – ரேஸ்கோர்ஸ் முழு சுற்று – ஈஸ்ட் கிளப் ரோட்டில் முடியும் வகையில், ஆரோக்கியமான நடைப்பயிற்சி மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இப்பாதையை கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, ‘நடப்போம்; நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி நடத்தப்படும்; நடைபயிற்சி முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை, நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்; சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.நடைபயிற்சி பாதையில், ஒவ்வொரு கி.மீ.,க்கு ஒரு இயன்முறை டாக்டர், ஒரு தன்னார்வலர், சுகாதார பணியாளர் கொண்ட மருத்துவ குழு உதவி மையம் அமைக்கப்படும்; 8 கி.மீ.க்கு தலா ஒன்று வீதம், எட்டு குழுக்கள் அமைக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். யாருக்கு நல்லது? உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் 10 ஆயிரம் அடிகள் அதாவது, 8 கி.மீ. நடப்பதால் நீரிழிவு மற்றம் ரத்த அழுத்த நோய்கள் 28 சதவீதம், இதய நோய் தாக்கம் 30 சதவீதம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. மக்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், நாள்பட்ட உடல் பிரச்னைகள், மன அழுத்தத்தை குறைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.