உக்கடம் மேம்பாலம் – சுங்கம் பைபாஸ் சாலை இறங்குத்தளம் திறப்பு – போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி.!!

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக உக்கடம் பகுதி உள்ளது. இங்கு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல நீண்ட நேரம் பிடித்தது .இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு மேம்பாலம் கட்டுப்பணி தொடங்கப்பட்டது. ரூ.482 கோடியில் இரண்டு கட்டங்களாக கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதன் காரணமாக இந்த பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது .இதில் சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் மீது ஏறவும், ,இறங்கவும் வசதியாக இறங்குதளம் ஏறுதளம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதன் காரணமாக மேம்பாலம் இறங்கும் சுங்கம் பைபாஸ் ரோட்டில் மட்டும் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. காலை – மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது .இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று சுங்கம் பைப்பாஸ் ரோட்டில் இருந்து மேம்பாலத்திற்கு செல்லும் வாகனங்கள் பாலத்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சுங்கத்திலிருந்து பொள்ளாச்சி, குனியமுத்தூர், சுந்தராபுரம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மேம்பாலத்தின் மீது ஏறி பயணித்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- உக்கடம் மேம்பாலம் அமைப்பதற்கு முன் உக்கடத்திலிருந்துஆத்துப்பாலத்தை கடந்து செல்ல 40 நிமிடங்கள் வரை பிடித்தது. தற்போது மேம்பாலம் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் பயண நேரம் 4 நிமிடமாக குறைந்துள்ளது. இனி பொள்ளாச்சி – பாலக்காடு சாலை வழியாக வரும் வாகனங்கள் சுங்கம் சிங்காநல்லூர் மற்றும் திருச்சி ரோட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் இந்த புதிய இறங்குதளம் வழியாக செல்ல முடியும் .இவ்வாறு  அவர்கள் கூறினார்கள்.