‘ஆபரேஷன் அகழி’…திருச்சியின் பிரபல ரவுடி பட்டறை சுரேஷ் கைது..!

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மூலம், ரெளடிகள் அரசியல்வாதிகள் என்ற பெயரில் சிலா், பலரையும் மிரட்டி அசையும் மற்றும் அசையா சொத்துகளையும், ஆவணங்களையும் பெற்று வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி எஸ்பி தலைமையில், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸாா், திருச்சி மாநகர போலீஸாா் இணைந்து கடந்த 19-ஆம் தேதி முதல் ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு சோதனையை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சி மாநகர மற்றும் மாவட்ட ரெளடி பட்டியலில் உள்ள திருவெறும்பூா் வட்டம், நத்தமாடிப்பட்டி அருகேயுள்ள கீழக்குறிச்சியைச் சோ்ந்த இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் பட்டறை சுரேஷ், எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த சந்திரமெளலி உள்ளிட்ட 14 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் ரெளடிகளுக்கு தொடா்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 புரோ நோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 கைப்பேசிகளும், 84 சிம் காா்டுகளும், பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதில் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்கள் மைக்கேல் சுரேஷ் (எ ) பட்டறை சுரேஷ் வீட்டில் கைப்பற்றப்பட்டன. அவை சட்ட விரோதமாக கட்டப் பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் சுரேஷ் தலைமறைவாகிவிட்டாா்.ரகசிய தகவலின் பேரில், சுரேஷை பிடிக்க போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
சா்க்காா் பாளையம் கல்லணை சாலையில், வேங்கூா் பூசத்துறை அருகே நடைபெற்ற வாகன தணிக்கையில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதித்தபோது, அதில், பட்டறை சுரேஷ் மற்றும் குடும்பத்தினா் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து காா் மற்றும் காரிலிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் காரையும் பட்டறை சுரேஷையும் திருவெறும்பூா் காவல் நிலையம் கொண்டு சென்று 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். பட்டரை சுரேஷ் அவருக்கு உதவி அவரது நண்பர்கள் கீழப்பாண்ட மங்கலத்தைச் சேர்ந்த கமல் என்கிற குமார் 23 நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் 23 உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர் இவர்கள் மூன்று பேரையும் திருச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அக்டோபர் ஆறாம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பட்டறை சுரேஷ் மீது ஏராளமான கொலை வழக்குகளும் அடிதடி வழக்குகளும் வழிப்பறிக் கொள்ளைகளும் உள்ள வழக்குகள் உள்ளன பட்டறை சுரேஷ் பாரிவேந்தர் கட்சியான ஐஜேகே கட்சியில் பொறுப்பில் உள்ளார். ஆப்ரேஷன் அகழி சிறப்பு சோதனையில் எடமலைப்பட்டி புதூர் ரவுடி சந்திர மௌலி உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் ரவுடியிசம் செய்பவர்களை கண்டுபிடித்து இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.