புதுடெல்லி: மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்கக் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. இந்நிலையில், பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதில் ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் கார்கே உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால், எதிர்பார்க்கப்பட்டபடியே இன்று (ஜூலை 26) மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் ஒன்றை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார். அவருடன் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். பாரத் ராஷ்டிர சமிதி தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. ஆனால், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு மக்களவையில் 332 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் சூழலில், இந்தத் தீர்மானத்தில் ஆட்சி எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஒருநாள்கூட இரு அவைகளும் முழுவீச்சில் செயல்படாத நிலையில் இன்னும் 13 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட்தால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் மீதான விவாதம் நேரம் குறித்து திட்டமிட்டு அறிவிக்கப்படும் என்றார். மணிப்பூர் பற்றிய விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவையில் பிரதமர் இருப்பது அவசியம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.