ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார்.அவர் எதிர்பார்த்ததை விட மாநாடு சிறப்பாக அமைந்ததை அடுத்து மே 8-ம் தேதி டிடிவி தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார்.
இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியலில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை அவ்வாறு எந்த சந்திப்பும் நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற பொது தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு நடக்கலாம். அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதுதான் என் வேலை. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும். தொண்டர்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு கட்சியின் தலைமை என சொல்ல முடியும்” என பேட்டியளித்து இருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சர்ருமான வைத்தியலிங்கம் மகன் திருமணம் வரும் ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கும் இந்த திருமணத்திற்கு டிடிவி தினகரன் நேரில் சென்று அழைத்த வைத்திலிங்கம் அடுத்ததாக சசிகலாவையும் அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வரும் ஜூன் 7ம் தேதி நடைபெறும் திருமணத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா சந்திப்பு நிகழும் என தகவல் வெளியாகி உள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.