சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு ரூ.75 ஆயிரமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கிப் போயுள்ளன. சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பல இடங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு பயிர்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பெரிய அளவுக்கு மழை பெய்யவில்லை என்றாலும், பல பகுதிகள் மழை நீரால் சூழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே, முதல்வர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றவும், மின்சார இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெற் பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக அதிகரிக்கவும், இதர இழப்பீட்டுத் தொகைகளை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குறைந்தபட்சம் இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.