ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 26 போ் உயிரிழந்தனா். இத்தாக்குதல் நாடுமுழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து மறுநாள் பிரதமா் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தொடா்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் இருத்தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக நள்ளிரவு அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இருப்பினும் இதில் யாருக்கும் பாதிப்பபு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறல்கள் இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.