டெல்லி: 2023ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிட்டது. இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது.
இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். அதானி குழு பங்கு சரிவு, மோடி – பிபிசி ஆவணப்பட விவகாரம் காரணமாக இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் கூட்டத்தொடராக இருக்க போகிறது.
இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் அவை நடவடிக்கைகள் முடிவடையும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் இன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.
அதற்கு மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி இன்று காலை நடைபெறும் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெறுகிறது. நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது இதுதான் முதல் முறை. இதற்கு மறுநாள் அதாவது நாளை நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது.
நிதி நிலை அறிக்கைக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். 2022-2023ம் ஆண்டின் வளர்ச்சி, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல், முதலீடுகள், வருவாய் போன்றவை தொடர்பான விவரங்கள் இன்றைய அறிக்கையில் இடம்பெற்று இருக்கும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நீண்ட தொடராக இருக்க போகிறது. முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடக்கும்.
இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கும். மொத்தம் இரண்டு அமர்வுகளாக இந்த நீண்ட கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி குழும பங்குகள் சரிவு, ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டு, எல்ஐசி பங்குகள் சரிவு, மோடி பிபிசி ஆவண பட சர்ச்சை போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரி கோஷம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி கட்டுப்பாடு, வருமான வரி குறைப்பு, சாமானியர்களுக்கு சாதகமாக சில அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.
வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை பல வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பாக பட்ஜெட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதுபோல் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டங்கள் , நாடு முழுக்க இலவச அரிசி, கோதுமை வழங்குவது தொடர்பான திட்டங்கள் இதில் இடம்பெறலாம். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், பிப்ரவரி 2ம் தேதி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.