கோவையில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள்- இன்று தொடங்கியது தேர்தல் ஆணையம்..!

கோவை: பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கோவையில் இன்று தொடங்கின. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
ஆணையம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோவை மாவட்டமும் ஒன்றாகும்.
கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையத்தின் மண்டல அளவிலான ஓட்டு இயந்திரக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில் 17,106 மின்னணு ஓட்டு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஓட்டு சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை சரிபார்த்து பழுது உள்ளதா? என ஆய்வு செய்து தயார் நிலையில் வைக்கும் பணியை தேர்தல் ஆணையம் இன்று தொடங்கியது. கோவை மாவட்ட
கலெக்டர் கிராந்தி குமார் முன்னிலையில் ஓட்டு இயந்திர கிடங்கு சீல் திறக்கப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் இந்த பணிகள் தொடங்கியுள்ளன.
மின்னணு ஓட்டு இயந்திரத்தை தயாரித்த பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் குழுவினர் 5 பேர் வந்துள்ளனர்.
அவர்கள் ஒவ்வொரு இயந்திரமாக சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியானது 20 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும்: இதே போல நாடு முழுவதும் இருக்கும் தேர்தல் ஆணையக் கிடங்குகளிலும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..